விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருப்பூரில் டிராக்டர் பேரணி நேற்று மாலை நடைபெற்றது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது மோடி அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்தும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
திருப்பூர் பூலுவப்பட்டியில் இருந்தும், பல்லடம் ராயர்பாளையத்தில் இருந்தும் பேரணி தொடங்கி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நிறைவடைந்தது. 6-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர். பின்னர் அங்கு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மதுசூதணன், நிர்வாகி மோகன் ஆகியோர் பேசினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.