நியாயமான கூலி உயர்வு கேட்டு உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம்
அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்கிட வலியுறுத்தி எவர்சில்வர் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாளைக்குள் சுமூக தீர்வு காணப்படாவிட்டால் நாளை மறுதினம் மகாசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலி உயர்வு
திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி மற்றும் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவர்சில்வர் தரப்பில் 10 சதவீதமும், பித்தளை, செம்பு தரப்பில் 15 சதவீத கூலி உயர்வும் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால் கூட்டு கமிட்டி தரப்பில் பழைய கூலி உயர்வான 21 மற்றும் 30 சதவீதம் என்ற அடிப்படையில் தற்போது கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் சம்மதிக்கவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து பாத்திர தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி அனுப்பர்பாளையத்தில் உள்ள எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வேலுச்சாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்.), தேவராஜ் (ஏ.டி.பி.), ரங்கராஜ், குப்புசாமி (சி.ஐ.டி.யு.) செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி), வி.ஆர்.ஈஸ்வரன், அசோக் (ஐ.என்.டி.யு.சி), பாண்டியராஜ் (ஹெச்.எம்.எஸ்.), சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்.), அர்ஜூனன், ஆறுமுகசாமி (காமாட்சியம்மன் பாத்திர சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாத்திர தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கூட்டுக் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படாவிட்டால் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெறும் மகாசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி அறிவித்துள்ளது.
நாளைக்குள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.