5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு ஏற்பாடு


5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனைவிதைகள் நடும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைக்கிறார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனைவிதைகள் நடும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைக்கிறார்.

பனைமரங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 லட்சம் பனை விதைகளை நடும் பணிகளை மாவட்ட நிர்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதைகள் சேகரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தன. தற்போது இவை அனைத்தும் சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழிகாட்டுதலின்படி, நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 5 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்ட 836 இடங்களில் இதற்கான குழிகள் தோண்டப்பட்டு தயார் நிலையில் உள்ள இடங்களில் சுமார் 50 லட்சம் பனை விதைகளை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளம், ஆற்றங்கரை, கால்வாய் ஓரம் மற்றும் மாநில, கிராம சாலை ஓரம், சீமை கருவேல மரங்களை நீக்கிய பின்னர் தரிசாக உள்ள அரசு நிலங்கள், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த பனை விதைகளை நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பனை நடவு செய்யும் பணியினை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய பனை மரத்தினை அதிக அளவில் நடவு செய்து எதிர்கால சந்ததியினர் பனை மரத்தின் பயன்களை பெறவும், பனை மரத்தால் மனித குலத்திற்கு கிடைக்கும் பயன்களை வழங்கிடவும், இயற்கையை பாதுகாத்து மேம்படுத்திடவும் இந்த நடவுப் பணியில் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story