பள்ளிகளில் மாணவர்களுக்கு தட்டு-டம்ளர் வழங்க ஏற்பாடு
காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதையடுத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தட்டு, டம்ளர் வாங்குவதற்காக கும்பகோணத்தில் உள்ள பாத்திரக்கடைகளில் ஆசிரியர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதையடுத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தட்டு, டம்ளர் வாங்குவதற்காக கும்பகோணத்தில் உள்ள பாத்திரக்கடைகளில் ஆசிரியர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
காலை உணவு திட்டம்
தமிழகத்தில் தான் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதை கடந்த 25-ந் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டத்தில் 1,112 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 53 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
தட்டு, டம்ளர்
காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் ஆகியவற்றை பள்ளியிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தட்டு, டம்ளர் வாங்குவதற்கு ஆசிரியர்கள் பாத்திரக்கடைகளில் குவிந்து வருகிறார்கள். பாத்திரக்கடைகள் கும்பகோணத்தில் அதிகம் உள்ளதால், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கும்பகோணத்துக்கு வந்து தட்டு, டம்ளர் வாங்கி செல்கிறார்கள்.
மொத்தமாக ஆர்டர்
ஒரு சிலர் முன்னதாகவே வந்து தங்களுக்கு தேவையான சாப்பாடு தட்டு் மற்றும் டம்ளர்களுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுத்து செல்கிறார்கள். இதுகுறித்து கும்பகோணம் பகுதியில் உள்ள பாத்திரக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'அரசு அதிகாரிகள் ஒரே குழுவாக வந்து கடையில் உள்ள சாப்பாடு தட்டுகளை தேர்வு செய்கிறார்கள். அவர்கள் குழந்தைகள் சாப்பிடும் வகையில் எடை குறைவான தட்டுகளை கேட்கிறார்கள். மொத்தமாக தட்டு, டம்ளர்களை வாங்க ஆர்டர் வருகிறது. இதன் காரணமாக புதிதாக தட்டு, டம்ளர்களை வாங்க ஏற்பாடு செய்து வருகிறோம். மொத்தமாக வேண்டும் என்றால் வெளிமாநிலங்களில் ஆர்டர் கொடுத்து தான் வாங்க முடியும். தற்போதைய நிலவரப்படி கடையில் இருப்பு இருந்த சாப்பாடு தட்டுகள் அனைத்தும் விற்று விட்டது' என்றனர்.