காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு:கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு-அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க கோபுரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் ஊருக்குள் அமைப்பதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
கூடலூர்
காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க கோபுரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் ஊருக்குள் அமைப்பதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
கண்காணிப்பு கோபுரங்கள்
கூடலூர் தாலுகா பகுதியில் கடந்த சில வருடமாக காட்டு யானைகள் - மனிதர்கள் இடையே மோதல்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக யானைகள் தாக்கி பொதுமக்கள் இறந்து வரும் சூழ்நிலையில், கடந்த மாதம் ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஒரே வாரத்தில் 2 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இறந்தவரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வருவாய், வனம், காவல்துறையினர் இணைந்து ஆலோசனை நடத்தினர். மேலும் வரும் காலங்களில் காட்டு யானைகளால் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்ன உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
முற்றுகை
ஓவேலியில் யானைகளை கண்காணித்து கிராமப்பகுதிக்குள் வராமல் இருக்க 5 இடங்களில் நிரந்தர கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் முகாம்கள் ஏற்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோபுரங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணியை அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஓவேலி காந்திநகர் கிராமத்தில் முகாம் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்றும் பணி தொடங்க ஆயத்தமான நிலையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்த ஆர்டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் வனத்துறையினர் அதிகாரிகள் வந்தனர். அவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், வனப்பகுதியில் கோபுரம் அமைக்கும் பணியை செய்யாமல் கிராமத்துக்குள் வந்து மக்கள் வசிக்கும் பகுதியை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்த முயற்சி நடப்பதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பின்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு முன்பு பல இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வனத்துறையினர் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு தற்போது அந்த பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் வந்ததாகவும் எனவே தங்கள் கிராம பகுதியில் இந்த பணியை மேற்கொள்ள வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக ஆய்வு பணியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.