பவுர்ணமி நாளில் பக்தர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மாதம் பவுர்ணமியின் போது கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) மாலை தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை நிறைவடைகிறது.
மேலும் இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தீபத் திருவிழாவின் போது எவ்வாறு பக்தர்களை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, பக்தர்கள் வந்து செல்லும் வழி குறித்து வருகிற பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை வைத்து ஒத்திகை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் கோவிலில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் ராஜகோபுரத்தில் இருந்தும், அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்தும் கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் எந்தவித இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.