கோபியில் உணவில்லாமல் இறந்த உறவினர் பிணங்களுடன் 7 நாட்கள் இருந்த தாய்-மகனை காப்பகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு
கோபியில் உணவில்லாமல் இறந்த
கோபியில் உணவில்லாமல் இறந்த உறவினர் பிணங்களுடன் 7 நாட்கள் இருந்த தாய், மகனை காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
2 பேர் சாவு
ஈரோடு மாவட்டம் கோபி குமணன் வீதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி சாந்தி (60). இவர்களுடைய மகன் சரவணக்குமார் (33). மகள் சசிரேகா. சரவணக்குமார் உடல் நலம் சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதனால் அவரை மோகனசுந்தரமும், சாந்தியும் தங்களுடன் வைத்து பராமரித்து வந்தனர்.
மேலும் சாந்தியின் தாயாரான கனகாம்பாளும் மோகனசுந்தரத்துடன் வசித்து வந்து உள்ளார். சசிரேகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவருடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே வயது முதிர்வு காரணமாக தாய் கனகாம்பாளுக்கும், கணவர் மோகனசுந்தரத்துக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மோகனசுந்தரம் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. உணவில்லாமல் கடந்த 7 நாட்களுக்கு முன்பு மோகனசுந்தரமும், அவரைதொடர்ந்து கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பிணங்களுடன் தாய், மகன்
வறுமையால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கூட பணமில்லாததால் 2 பிணங்களுடன் சாந்தி மகன் சரவணக்குமாருடன் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு மோகனசுந்தரம் மற்றும் கனகாம்பாளின் இறுதி சடங்குக்கான செலவுகளை கோபி போலீசார் ஏற்றுக்கொண்டு உடல்களை அடக்கம் செய்தனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த சரவணக்குமார், அவருடைய தாய் சாந்தியை பாதுகாக்க எண்ணினர். அவர்கள் 2 பேரையும் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
உறவினர் வரவழைப்பு
அதைத்தொடர்ந்து அதற்கான நடவடிக்கையை தொடங்கினார்கள். சாந்தியின் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அக்கம்பக்கத்திலும் விசாரித்து வந்தனர். அப்போது சாந்தியின் உறவினர் ரமேஷ் என்பவர் கோவையில் இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ரமேசை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்கள். மேலும் சாந்தி மற்றும் சரவணக்குமாரின் நிலைமையையும் விளக்கி கூறினார்கள். இதையடுத்து ரமேஷ் கோபி வந்தார். பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளை நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி கொடுத்தார்.
பாராட்டு
அதில் அவர், 'சாந்தி மற்றும் சரவணக்குமாரை பராமரிக்க போதிய வசதி என்னிடம் இல்லை. எனவே 2 பேரையும் பராமரிக்க காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்' என கூறியுள்ளார்.
இதனால் சாந்தி, சரவணக்குமாரை அறக்கட்டளை நிர்வாகிகள் பெருந்துறையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளனர்.
நாளை (அதாவது இன்று) சாந்தி மற்றும் சரவணக்குமாரை காப்பகத்தில் ஒப்படைப்போம் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட மகனையும், அவருடைய தாயையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க உதவிய கோபி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு்கள் தெரிவித்துள்ளனர்.