ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேர் அதிரடி கைது; 67 பவுன் நகை-ரூ.3 லட்சம் மீட்பு


ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேர் அதிரடி கைது; 67 பவுன் நகை-ரூ.3 லட்சம் மீட்பு
x

ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 67 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சமும் மீட்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 67 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சமும் மீட்கப்பட்டது.

நகை-பணம் கொள்ளை

ஈரோடு-பெருந்துறை ரோடு டாக்டர் தங்கவேல் வீதியை சேர்ந்தவர் விஷ்ணுதீபக் (வயது 44). தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு யோக சந்திரன் என்ற மகன் உள்ளான்.

விஷ்ணு தீபக் தன்னுடைய மகனுக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்தினருடன் கடந்த 22-ந்தேதி விருத்தாச்சலத்துக்கு சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் லாக்கரில் இருந்த 45 பவுன் நகை, ரூ.3 லட்சம், ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தடயங்கள் சேகரிப்பு

போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கொள்ளையர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடி தூவி இருந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கிடுக்குப்பிடி விசாரணை

மேலும் டாக்டர் விஷ்ணு தீபக்கின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டாக்டரின் கிளினீக்கில் வேலை பார்க்கும் வசந்தகுமார் என்ற ஊழியர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடியபோது அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு சென்றது தெரியவந்தது.

இதனால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று வசந்தகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவர் பதற்றத்துடனும் காணப்பட்டார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வசந்தகுமார் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

கொள்ளை அடிக்க முடிவு

இதுகுறித்து வசந்தகுமார் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் டாக்டர் விஷ்ணு தீபக்கின் தந்தை சந்திரன் நடத்தி வரும் கிளினீக்கில் வேலை பார்த்து வந்தேன். இதனால் அடிக்கடி நான் டாக்டர் வீட்டிற்கு சென்று வந்தேன். இதன் காரணமாக அவருடைய குடும்பத்துடன் நெருங்கி பழகினேன். அப்போது விஷ்ணு தீபக்கின் வீட்டில் அதிக அளவில் நகை மற்றும் பணம் இருப்பது எனக்கு தெரியவந்தது.

எனவே அவற்றை கொள்ளை அடிக்க திட்டம் போட்டு காத்திருந்தேன். அதன்படி கடந்த 22-ந்தேதி டாக்டர் குடும்பத்தினர் வெளியூர் சென்றதை பயன்படுத்தி கொள்ளை அடிக்க முடிவு செய்தேன். இதற்காக கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த எனது தம்பி அருண்குமார் (24) நண்பர்கள் பிரவீன் குமார் (26), பிரித்விராஜ் (23) ஆகியோரை அழைத்தேன்.

4 பேர் கைது

அவர்கள் அங்கிருந்து ஒரு கார் மூலம் ஈரோடு வந்தனர். பின்னர் நாங்கள் 4 பேரும் சேர்ந்து டாக்டர் வீட்டின் பின்பகுதியில் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்து வெண்டிலேட்டரை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தோம். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த லாக்கரை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றோம். பின்னர் கொள்ளை அடித்ததை 4 பேரும் பங்கு போட்டுக்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வசந்தகுமார், அருண்குமார், பிரவீன் குமார், பிரித்விராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 67 பவுன் நகை, ரூ.3 லட்சம், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்காக பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story