சித்தோடு பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது; 11 பவுன் நகை மீட்பு -மோட்டார் சைக்கிள் பறிமுதல்
சித்தோடு பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி
சித்தோடு பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
பவானியை அடுத்த சித்தோடு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் சித்தோடு போலீசார் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்்த நிலையில் நேற்று மாலை சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் போலீசார் சித்தோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஒரே மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர்.
நகை பறிப்பு
அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேல்வார்கோட்டை பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரின் மகன் தவீப் ராஜா (வயது 29), கோவை வேலாண்டிபாளையம், தடாகம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் மனோஜ் என்கிற முகில் (23) ஆகியோர் என்பதும், 2 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்்த தகவல்கள் வருமாறு:-
சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். அவருடைய மனைவி கிருஷ்ணனுன்னி. இவர்கள் 2 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் அங்கு சென்ற தவீப் ராஜாவும், முகிலும் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கிருஷ்ணனுன்னி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
2 பேர் கைது
அதேபோல் பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வந்த சுகந்தி என்பவர் கடந்த மாதம் தனது பணியை முடித்துக்கொண்டு மொபட்டில் சித்தோட்டில் உள்ள தனது வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
கங்காபுரம் தனியார் கார் கம்பெனி அருகே வந்தபோது ஹெல்மெட் அணிந்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற தவீப் ராஜாவும், முகிலும் சுகந்தியின் மொபட்டில் மோதுவது போல் மோதி அவரை கீழே தள்ளினார்கள். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 8½ பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதையடுத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக தவீப் ராஜாவையும், முகிலையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட 11 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.