தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ்காரர் கைது


தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றி திரிந்த இலங்கை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றி திரிந்த இலங்கை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையை சேர்ந்தவர் சிக்கினார்

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக அந்தபகுதியை சேர்ந்த மீனவர்கள், ராமேசுவரம் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் மத்திய- மாநில உளவுப்பிரிவு மற்றும் கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அவரது பெயர் தினேஷ்காந்தன் (வயது 36) என்பதும், இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

2 மாதத்துக்குமுன் திருமணம்

மேலும் கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடந்ததாகவும், ஆனால் இவரை விட்டு பிரிந்த இவரது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை போலீசில் பணிக்கு சேர்ந்த தினேஷ்காந்தன், அதன்பின்பு வேலையை விட்டு நின்றுள்ளார். பின்னர், 2019-ம் ஆண்டு காவல் துறையில் மீண்டும் பணிக்கு சேர்ந்தார்.

திரிகோணமலை பகுதியில் உள்ள மிதுரகிரி மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் மீண்டும் வேலையில் இருந்து நின்று, தற்போது அங்கு கூலி வேலை பார்த்துள்ளார்.

விமானத்தில் வந்தார்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேசுவரம் வர முயற்சி செய்தபோது இலங்கை கடற்படை பிடித்து மீண்டும் இலங்கைக்கு எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்கள். அதனால் விசாவுக்கு விண்ணப்பித்து விமானம் மூலம் கடந்த 8-ந் தேதி சென்னைக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ராமேசுவரம் வந்து, தனுஷ்கோடியில் சுற்றித்திரிந்தவரைத்தான் போலீசார் பிடித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாக தெரிவித்தால் அகதியாக பதிவு செய்து முகாமில் தங்க வைக்க அனுமதி கிடைக்கும் என்று நினைத்து, போலீசாரிடம் மாறி, மாறி பேசி இருக்கிறார். ஆனால், தீவிர விசாரணையில் அவர் விமானத்தில் சென்னை வந்தது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story