ஓமலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை திருடிய 4 பேர் கைது


ஓமலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகையை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகையை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

32 பவுன் நகை திருட்டு

ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவரது மனைவி தமிழ்கொடி (34). கனகராஜ் சேலத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 11-ந் தேதி கனகராஜ் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி தமிழ்கொடி கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வேலை முடித்து வீட்டுக்கு வந்த கனகராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 32 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை

மேலும் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை, ஓமலூர் சப்-டிவிசன் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே நகை பறிப்பு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது.

அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கேவலஹள்ளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (25). சேலம் சன்னியாசி குண்டுவை சேர்ந்த ராஜமாணிக்கம் (26), செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த பாபு என்கிற டாக் பாபு (32), கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30) ஆகியோர் என்பதும், இவர்கள் கனகராஜ் வீட்டில் 32 பவுன் நகையை திருடியது தெரியவந்தது.

கைது

இதனையடுத்து சேலம் மத்திய சிறையில் இருந்த ராஜ்குமார், ராஜமாணிக்கம் பாபு என்கின்ற டாக் பாபு, வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் ஓமலூர் போலீசார் காவலில் எடுத்து தொளசம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 22 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஓமலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, அருள் வடிவேலன் மற்றும் போலீசார் கைது செய்து அவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர்.


Next Story