கருமுட்டை விவகாரத்தில் இரவு முழுவதும் விசாரணை பெண் புரோக்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்- மீண்டும் ஜெயிலில் அடைப்பு


கருமுட்டை விவகாரத்தில் இரவு முழுவதும் விசாரணை பெண் புரோக்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்- மீண்டும் ஜெயிலில் அடைப்பு
x

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பெண் புரோக்கரிடம் இரவு முழுவதும் விசாரணையை முடித்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு

ஈரோடு

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பெண் புரோக்கரிடம் இரவு முழுவதும் விசாரணையை முடித்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கருமுட்டை விற்பனை

தமிழ்நாட்டில் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்காக கருமுட்டை விற்பனை விவகாரம் உள்ளது. ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இருந்து ஈரோடு, பெருந்துறை, ஓசூர், சேலம், திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் பிரபல தனியார் கருத்தரிப்பு மையம் ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை பெறப்பட்டு உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை விற்பனையில் சிறுமியின் தாய், தாயின் 2-வது கணவர் ஈடுபட்டது தொடர்பாக சிறுமி கொடுத்த புகார் மூலம் தெரிய வந்தது.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியின் கருமுட்டை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் தாய், தாயாரின் 2-வது கணவர் ஆகியோருடன் புரோக்கராக செயல்பட்ட மாலதி என்பவரும், போலி ஆதார் அட்டை தயாரித்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் காவல்

இந்த நிலையில் கருமுட்டை விற்பனை தொடர்பாக மேலும் விவரங்கள் சேகரிக்கவும், இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை கண்டறியவும் சிறுமியின் தாய், 2-வது கணவர் மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்தார். புரோக்கர் மாலதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஒரு நாள் கால அவகாசம் அளித்து நீதிபதி அனுமதி அளித்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் புரோக்கர் மாலதியை போலீசார் கோர்ட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

பின்னர் அவரிடம் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்குள் மாலதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய நிலையில் பகல் 12 மணிக்கு முன்னதாகவே போலீசார் மாலதியை கோர்ட்டுக்கு அழைத்துவந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தெளிவுபடுத்தப்பட்டது

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கருமுட்டை வழக்கு தொடர்பாக ஏற்கனவே காவல்துறை விசாரணை நடத்தப்பட்டு ஏராளமான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக பல கட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களை தெளிவுபடுத்தவே, மாலதியை போலீஸ் காவலில் விசாரிக்க விண்ணப்பித்து இருந்தோம். எங்களிடம் கிடைத்த ஆவணங்கள், தகவல்களை மாலதியிடம் கேட்டு தெளிவுபடுத்தி இருக்கிறோம். அவரிடம் விசாரணை முடிந்ததால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் விசாரணையில் மாலதியின் வங்கி கணக்கில் அடிக்கடி பணம் வரவு வைக்கப்பட்டது குறித்தும், அவர் 16 வயது சிறுமி தவிர வேறு சிறுமிகளை இந்த கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தினாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மாலதியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும். இதுபோல் சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர் ஆகியோரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தின் மூலம் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு டாக்டர்கள் நேற்று முன்தினம் இரவு வரை கருமுட்டை விற்பனை வழக்கில் போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தனர். பின்னர் நேற்று காலை அவர்கள் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர்.


Related Tags :
Next Story