மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 4½ பவுன் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது; பெருந்துறை அருகே துணிகரம்
பெருந்துறை அருகே மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மர்மநபர்கள் 2 பேர்
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். அவருடைய தாயார் முத்தாயம்மாள் (வயது 70). இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். முத்தாயம்மாள் நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இரவு 8.30 மணி அளவில் கடை முன்பு ஒரு மோட்டார்சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து மர்மநபர்கள் 2 பேர் இறங்கினார்கள். பின்னர் அவர்கள் கடைக்கு சென்று முத்தாயம்மாளிடம் தண்ணீர் பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் அவர், தண்ணீர் பாட்டிலை எடுக்க திரும்பினார்.
நகை பறிப்பு
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வந்தவர்களில் ஒருவன் கண் இமைக்கும் நேரத்தில் முத்தாயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை வெடுக்கென பறித்தான். பின்னர் அங்கு நின்ற மோட்டார்சைக்கிளில் ஏறி 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் போலீசார் நேற்று பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிக்கோவில் பிரிவு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பவானி கூலிக்காரன்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (37), பெருமாள் (38) என்பதும், 2 பேரும் முத்தாயம்மாளிடம் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டதையும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கசங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் ஈரோடு கூடுதல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.