2 டன் ரேஷன் அரிசியுடன் லாரி உரிமையாளர் கைது
2 டன் ரேஷன் அரிசியுடன் லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையில் போலீசார் மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 50 மூடைகளில் தலா 40 கிலோ விதம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதனைத் தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மினிலாரியுடன் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி ஓட்டுனரும் உரிமை யாளருமான மதுரை முனிச்சாலையை சேர்ந்த கார்த்திகேயன் (வயது27) என்பவரிடம் விசாரணை நடத்திய போது மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் (25) என்பவருக்காக ரேஷன் அரிசி மூடைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.மேலும் ரேஷன் அரிசியை மல்லாங்கிணறு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து சேகரித்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக கார்த்திகேயன் மற்றும் வேல்முருகன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். வேல்முருகனை தேடி வருகின்றனர்.