ராமநாதபுரத்தில் நகைகடை உரிமையாளர் கைது
ராமநாதபுரத்தில் ஏல நகைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 31 பெண்களிடம் ரூ.2½ கோடி ஏமாற்றிய வழக்கில் நகைகடை உரிமையாளர் கைதானார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் ஏல நகைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 31 பெண்களிடம் ரூ.2½ கோடி ஏமாற்றிய வழக்கில் நகைகடை உரிமையாளர் கைதானார்.
குறைந்த விலைக்கு நகை
ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடி பகுதியை சேர்ந்தவர் இளங்கண்ணன் என்பவரின் மகள் மீராலெட்சுமி (வயது26). இவர் உள்பட 31 பெண்களிடம் குறைந்த விலைக்கு நகை தருவதாக கூறி அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மனைவி வளர்மதி (30) என்பவர் அவரின் தங்கை காயத்ரி (25) ஆகியோர் ரூ.2 ½ கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
இவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளர் ராஜேஷ் என்பவரிடம் இருந்து நகைகளை வாங்கி இவ்வாறு குறைந்தவிலைக்கு தருவதாக கூறி உள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வளர்மதி, அவரின் தங்கை காயத்ரி, ராஜேஷ் மற்றும் பாலமுருகன், முத்துபகவதி, சண்முகவள்ளி, கோபிநாத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மோசடி
இந்த வழக்கில் நேற்று முன்தினம் வளர்மதி, காயத்ரி ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர் களிடம் நடத்திய விசாரணையில் நகைகடை உரிமையா ளரான ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் தெற்கு ரதவீதியை சேர்ந்த தெட்சிணா மூர்த்தி மகன் ராஜேஷ் (35) என்பவர் குறித்த தகவல் கிடைத்தது.
அவரின் நகைகடையில் அடகு வைத்த நகைகளை குறித்த காலத்திற்குள் திருப்பாதவர்களின் நகைகளை தருவதாக கூறித்தான் அக்காள் தங்கை மற்றும் ராஜேஷ் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் ராஜேசை கைது செய்தனர். ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.