பரமத்திவேலூரில் இந்து முன்னணியினர் 20 பேர் கைது
பரமத்திவேலூரில் இந்து முன்னணியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
இந்து முன்னணி கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து இந்து முன்னணியினர் பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட தலைவர் கலைவாணன், ஒன்றிய பொதுச்செயலாளர் மணிராஜ், ஒன்றிய தலைவர் ராஜ்குமார் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் பரமத்திவேலூர் மற்றும் பொத்தனூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளளனர்.