கல்லூரி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் கைது
கல்லூரி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி, கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த மாணவி கல்லூரிக்கு செல்ல மஞ்சளகிரி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், மாணவியை கல்லூரியில் விடுவதாக கூறி அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் கல்லூரியை தாண்டி வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கடத்திய கொல்லப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 21) என்பவரை கைது செய்தனர்.