ரூ.10 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி தலைவர் கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே அலவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர், இளம் கம்பன் (வயது 49). விவசாயி.
இவர் தனது நிலத்தில் செங்கல் சூளை அமைக்க முடிவு செய்தார். இதற்கு மின் இணைப்பு பெற ஊராட்சி அலுவலக ரசீது தேவைப்பட்டது. இதைதொடர்ந்து இளம்கம்பன் அலவாக்கோட்டை ஊராட்சி தலைவர் பிரகாசத்தை சந்தித்து ரசீது தரும்படி கேட்டதாகவும், அதற்கு அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் ரசீது தருவேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம் கம்பன், சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார், ரசாயனம் தடவிய பணநோட்டுகளை இளம் கம்பனிடம் கொடுத்து அனுப்பினர். அவர், அந்த பணத்தை அலவாக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து, ஊராட்சி தலைவரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் விரைந்து சென்று, லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் பிரகாசத்தை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.