மத்தூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது-குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்


மத்தூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது-குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்
x
கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சின்ன ஆலேரஅள்ளியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணகி (46). மாரியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மதுபோதையில் அவர் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

இதனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கண்ணகி கணவரை பிரிந்து மத்தூர் அருகே மூக்காகவுடனூரை அடுத்த சித்தண்டிகொட்டாய் பகுதியில் உள்ள தனது மகள் பூங்கொடி வீட்டிற்கு சென்று விட்டார்.

சரமாரி கத்திக்குத்து

அங்கிருந்தபடி கண்ணகி இருமத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவர், தனது மகள் பூங்கொடி வீட்டின் வெளியே திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் அங்கு வந்தார். அவர் தூங்கி கொண்டிருந்த கண்ணகியை எழுப்பி, குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணகியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைது

இந்தநிலையில் கண்ணகியின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த பூங்கொடி வெளியே ஓடி வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணகியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.


Next Story