அசாமில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி ஓசூரில் மீட்பு-திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது
ஓசூர்:
அசாமில் கடத்தப்பட்ட 14 வயது பள்ளி மாணவியை ஓசூரில் போலீசார் மீட்டனர். மேலும் மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபரை கைது செய்தனர்.
14 வயது மாணவி கடத்தல்
அசாம் மாநிலம் காம்ருப் மாவட்டம் பகுருதியா பகுதியை சேர்ந்தவர் அப்துல் வாகா (வயது 23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்துல் வாகா, அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும், 14 வயது மாணவியை காதலித்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் அப்துல் வாகா சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அவர் தான் காதலித்து வந்த 10-ம் வகுப்பு மாணவியை அங்கிருந்து ஓசூருக்கு கடத்தி வந்தார். ஓசூரில் திருமணம் செய்து கொண்டு, சிப்காட் பகுதியில் மாணவியுடன் குடும்பம் நடத்திவந்தார்.
அசாம் போலீசார் விசாரணை
இந்தநிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை அப்துல் வாகா கடத்தி சென்றதாக அசாம் மாநிலம் நாகர் பெரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்துல் வாகாவின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்காணித்தனர்.
அதில், அவர் ஓசூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிசிர்குமார் பாசுபதி தலைமையில் அசாம் மாநில போலீசார் ஓசூருக்கு வந்தனர். மேலும் கடத்தல் சம்பவம் குறித்து ஓசூர் போலீசாருக்கு தெரிவித்தனர்.
வாலிபர் கைது
பின்னர் அசாம் மாநில போலீசார் சிப்காட் பகுதியில் தங்கி இருந்த அப்துல் வாகாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களை போலீசார் அசாம் மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.