சரக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.5¾ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-பெண் கைது
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.5¾ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர்.
கடத்தல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் கும்பாரஅள்ளி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
அந்த வேனில் 79 மூட்டைகளில் 915 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது விழுப்புரத்தை சேர்ந்த ஈஸ்வரி (வயது 36) என்ற பெண் புகையிலை பொருட்களை வேனில் கடத்தி சென்றது தெரிந்தது.
பெண் கைது
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.