அரூர் கோட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை: 35 பெண்கள் உள்பட 95 பேர் கைது-மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை


அரூர் கோட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை: 35 பெண்கள் உள்பட 95 பேர் கைது-மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் கோட்டத்தில் சாராயம், மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 35 பெண்கள் உள்பட 95 பேரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.

சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை

தர்மபுரி மாவட்டத்தில் சாராயம் மற்றும் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த புகார்களின் பேரில் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரூர் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் அரூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

95 பேர் கைது

மேலும் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் உணவகங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெட்டிக்கடை உள்ளிட்டவற்றில் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதும், உணவகங்கள் சிலவற்றில் அனுமதியின்றி மது குடிக்க அனுமதித்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்ற செயல்களில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 95 பேரை கடந்த மாதம் கைது செய்தனர்.

பறிமுதல்

அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 225 மதுபாட்டில்கள், 50 லிட்டர் சாராயம், 350 லிட்டர் சாராய ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story