பவானி அருகே கோவிலில் குத்துவிளக்குகள் திருடிய 2 பேர் கைது
பவானி அருகே கோவிலில் குத்துவிளக்குகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பவானி
பவானி அருகே கோவிலில் குத்துவிளக்குகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாய் குரைத்தது
பவானி அருகே உள்ள சித்தார் மேட்டூர் மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2½ மணி அளவில் 2 பேர் ஒரு மரத்துக்கடியில் கையில் சாக்குப்பையுடன் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் 2 பேரையும் பார்த்து குரைத்துள்ளது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தும் கணேசன் என்பவர் எழுந்து வந்து பார்த்தார்.
அவர் சாக்குப்பையுடன் நின்றிருந்த 2 பேரையும் பார்த்து, யார் நீங்கள்? ஏன் இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள்? என்று கேட்டார். அவர் கேட்டதும் 2 பேரில் ஒருவன் அங்கிருந்து ஓடிவிட்டான். இதனால் உஷாரான கணேசன் அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்து சாக்குப்பையுடன் நின்ற மற்றொருவனை மடக்கி பிடித்தார்.
2 பேர் கைது
பின்னர் பொதுமக்கள் பிடிபட்ட நபர் வைத்திருந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தார்கள். அதில் பெரிய குத்து விளக்கு ஒன்று, 2 சிறிய குத்து விளக்குகள், செம்பு சொம்பு ஆகியவை இருந்தது. உடனே இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், குறிச்சி சந்தை மேட்டை சேர்ந்த ரவிவிஜி (வயது 42) என்பதும், அவரும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (45) என்பவரும் சேர்ந்து குறிச்சி சொக்கநாச்சியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள் மற்றும் செம்பு சொம்பு திருடியதும் தெரிந்தது. இதையடுத்து கோவில் பொருட்களை மீட்ட போலீசார் ரவிவிஜியையும், தப்பி ஓடிய வேல்முருகனையும் கைது செய்தார்கள்.