பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய 165 கிலோ குட்கா பறிமுதல்-தென்காசியை சேர்ந்த 2 பேர் கைது
ஓசூர்:
பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய 165 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென்காசியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, அதில் இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன் (வயது 22) மற்றும் அதே ஊரை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் சிவா (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்காவை அவர்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வாலிபர்கள் முத்துகிருஷ்ணன், சிவாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.
கைது
விசாரணையில், அவர்கள் பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு 165 கிலோ குட்காவை கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குட்காவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்திய முத்துகிருஷ்ணன், சிவா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் 165 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.