ராயக்கோட்டை அருகே 9 மாத பெண் குழந்தை கொலை: விஷம் குடித்ததாக நாடகமாடிய தாய், கள்ளக்காதலனுடன் கைது


ராயக்கோட்டை அருகே 9 மாத பெண் குழந்தை கொலை: விஷம் குடித்ததாக நாடகமாடிய தாய், கள்ளக்காதலனுடன் கைது
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த கொடூர தாய், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27). கூலித் தொழிலாளி. இவருக்கும் ஞானமலர் (21) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பிரபாஷ் (2½) என்ற மகனும், ஆதிரா என்கிற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர். மாதேஷ் தினமும் கூலி வேலைக்காக வெளியே சென்று விடுவார். ஞானமலர் தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கராஜ் (28) என்ற விவசாயிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலானது. கணவர் வேலைக்கு சென்றதும், தனது கள்ளக்காதலன் தங்கராஜுடன், ஞானமலர் உல்லாசமாக இருந்து வந்தார்.

குழந்தைகளுக்கு விஷம்

இதுகுறித்து அறிந்த மாதேஷ், மனைவியை கண்டித்தார். மேலும் இனி கள்ளக்காதலை தொடர கூடாது என்று தனது மனைவியை எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமலர், தனது கள்ளக்காதலன் தங்கராஜிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.

மேலும் தனது குழந்தைகள் இருப்பதால் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே அவர்களை கொன்று விடலாம் என்று ஞானமலர் கூறினார். இதையடுத்து தங்கராஜ் கூறியபடி, ஞானமலர் குழந்தைகள் பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்தார். மேலும் தானும் விஷம் குடித்ததாக தெரிவித்தார்.

கைது

இதையடுத்து அவர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 மாத பெண் குழந்தை ஆதிரா பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் ஞானமலர், இவருடைய கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே ஞானமலர் விஷம் குடித்ததாக நாடகமாடியது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஞானமலரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய கள்ளக்காதலன் தங்கராஜும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story