பாப்பாரப்பட்டி அருகே விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு-தம்பதி கைது
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே விவசாயியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
விவசாயி
பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டனஅள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு மாதையன் (வயது 55), அருணாசலம் என்ற மகன்களும், மாரியாத்தா (50) என்ற மகளும் உள்ளனர். மாதையன் விவசாயம் மற்றும் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். மாரியாத்தா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் தனது அண்ணன் அருணாசலத்தின் மகனான திம்மராயன் (30) என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று மாரியாத்தாவை, திம்மராயன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாதையன் திம்மராயன் வீட்டுக்கு சென்று, ஏன் என் தங்கையை தாக்கினாய்? என கேட்டதாக தெரிகிறது. மேலும், மாரியாத்தாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அரிவாள் வெட்டு
இந்தநிலையில் நேற்று இரவு திம்மராயன் மற்றும் இவருடைய மனைவி லட்சுமி (28) ஆகியோர் மாதையன் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் மாரியாத்தாவை தங்களுடன் அனுப்ப வேண்டும் என்று கூறினர். இதற்கு மாதையன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திம்மராயன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சித்தப்பா என்றும் கூட பாராமல் மாதையனை சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாதையன் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வலியால் துடித்த மாதையனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தம்பதி கைது
இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதையனை அரிவாளால் வெட்டிய திம்மராயன் மற்றும் லட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.
பாப்பாரப்பட்டி அருகே விவசாயியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.