கோட்டப்பட்டி அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது
அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டப்பட்டி போலீசார் புதுக்கோட்டை சரடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (வயது 37), பாபு (40), பெருமாள் (32) என தெரியவந்தது. மேலும் சாராயத்தை காய்ச்சி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்வது உறுதியானது. பிடிபட்டவர்கள் 60 பாக்கெட்டுகளில் அடைத்து பையில் மறைத்து கடத்தி சென்ற 30 லிட்டர் சாராயம் சிக்கியது. அந்த சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சாராய கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.