தர்மபுரியில் போலீசார் வாகன சோதனை: வேன்களில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது-2 பேர் கைது


தர்மபுரியில் போலீசார் வாகன சோதனை: வேன்களில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது-2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வேன்களில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீசார் வேணுகோபால், கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிகோன்பாளையம் ரவுண்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 1,350 கிலோ ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக சிக்கியது.

இதேபோல் புறவழி சாலையில் சவுளூர் மேம்பாலம் அருகே ஒரு சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் 650 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி சிக்கியது.

2 பேர் கைது

இவற்றை கள்ள சந்தையில் விற்பதற்காக கடத்தி செல்வது விசாரணையில் தெரியவந்தது. 2 இடங்களில் நடந்த சோதனையில் சிக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தர்மதுரை (வயது 20), பெரியாம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (28) ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய ராஜீ, மாதையன் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story