ரூ.80 லட்சம் கேட்டு சிப்ஸ் கடைக்காரரை கடத்திய 6 பேர் கைது-மேலும் 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


ரூ.80 லட்சம் கேட்டு சிப்ஸ் கடைக்காரரை கடத்திய 6 பேர் கைது-மேலும் 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல் அருகே ரூ.80 லட்சம் கேட்டு சிப்ஸ் கடைக்காரரை கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிப்ஸ் கடைக்காரர்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூத்தப்பாடி மடம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 37). இவர் மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக அவர் ஊருக்கு வந்தார். பின்னர் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி விஸ்வநாதன் பென்னாகரம் செல்வதாக தனது மனைவி மஞ்சுளாவிடம் (30), கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவரது செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

மீட்பு

இதனிடையே விஸ்வநாதனின் செல்போனில் இருந்து, அவருடைய தம்பி பூபதிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், விஸ்வநாதனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.80 லட்சம் கொடுத்தால் விடுவோம், இல்லை என்றால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து மஞ்சுளா, ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விஸ்வநாதன் மற்றும் அவரை கடத்திய கும்பலை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் ஓமலூரில் விஸ்வநாதனை போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்தி வைத்திருந்த சேலம் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த காந்தி (43), காமலாபுரத்தை சேர்ந்த ரத்தினம் (45), மேட்டூர் அருகே செங்கனூரை சேர்ந்த பழனிசாமி மகன் தமிழரசன் (23), ஓமலூர் மேல்காமாண்டப்பட்டியை சேர்ந்த மணிவேல் மகன் கார்த்திகேயன் (24), இவருடைய தம்பி பாஸ்கரன் (22) ஆகிய 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

6 பேர் கைது

அப்போது விஸ்வநாதனுக்கும், பென்னாகரம் எரங்காடு பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்ததாகவும், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டும், பணம் பறிக்கும் நோக்கத்திலும் முருகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஸ்வநாதனை கடத்தியதும் தெரியவந்தது. மேலும் இந்த கடத்தலில் சிலருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முருகன் தனிப்படை போலீசில் நேற்று சிக்கினார். பின்னர் முருகன், காந்தி, ரத்தினம், தமிழரசன், கார்த்திகேயன், பாஸ்கரன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story