தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மதுபாட்டில்கள் விற்ற 4,561 பேர் கைது-19 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல்


தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மதுபாட்டில்கள் விற்ற 4,561 பேர் கைது-19 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 4,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 19 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிர ரோந்து பணி

தர்மபுரி மாவட்டத்தில் 25 போலீஸ் நிலையங்கள் மற்றும் 2 மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையங்கள் உள்ளன. சுமார் 1,200 போலீசார் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். தினமும் அவர்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை சந்திப்பு, முக்கிய சாலைகள் மற்றும் கிராமங்களில் மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், ஏரியூர் ஆகிய வட்டாரங்களில் 68 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.1 கோடியே 90 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது.

தனிப்படை அமைப்பு

இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் கர்நாடக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், திருவண்ணாமலையில் இருந்து கள்ளச்சாரயத்தை கொண்டு வந்து விற்பதை தடுக்கவும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தினமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு மது பாட்டில்கள் கடத்தல் மற்றும் பதுக்கல்காரர்களிடம் இருந்து மதுபானங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

4,561 பேர் கைது

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மதுபாட்டில்கள் கடத்தல், சந்து கடைகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் மற்றும் சாராயம் விற்றதாக 4 ஆயிரத்து 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 4 ஆயிரத்து 561 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 194 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடி மற்றும் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றனர்.


Next Story