பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 54). அரசு பஸ் டிரைவர். நேற்று மதியம் அய்யாசாமி பொம்மிடியில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். கொண்டகரஅள்ளியை சேர்ந்த முத்துசாமி கண்டக்டராக உடன் சென்றார். அரசு பஸ்சில் சிக்கம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (64) என்பவர் பூ மூட்டையுடன் ஏறினார். அவர் படியில் நின்றதால், கண்டக்டர் முத்துசாமி அவரை மேலே வருமாறு கூறினார். அவர் வர மறுத்ததால், டிரைவர் அய்யாசாமி படியில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆதிரமடைந்த கோவிந்தன் மற்றும் அவருடைய மகன் வரதராஜ் (41), தங்கமணி மகன் அய்யந்துரை (25) ஆகியோர் டிரைவர் அய்யாசாமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யாசாமி பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தன், வரதராஜ், அய்யந்துரை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.