கம்பைநல்லூர் அருகே உடும்புகளை வேட்டையாடியவர் கைது-கீரி, கவுதாரிகள் பறிமுதல்
மொரப்பூர்:
மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் சாம்பசிவம், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் கம்பைநல்லூர்-அரூர் சாலையில் நவலை அடுத்த அண்ணாமலைப்பட்டி பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி, அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அப்போது 2 உடும்பு, 2 கவுதாரி, ஒரு கீரிப்பிள்ளை ஆகியவை பையில் இருந்தது தெரியவந்தது. அதில் ஒரு உடும்பு செத்த நிலையில் இருந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோணம்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 47) என்பதும், வன விலங்குகளை வேட்டியாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் உடும்புகள், கவுதாரிகள் மற்றும் கீரிப்பிள்ளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பெரியசாமியை கைது செய்து அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.