பென்னாகரம் அருகே சந்தன மரம் வெட்டிய 4 பேர் கைது-ரூ.4 லட்சம் அபராதம்
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே சந்தன மரத்தை வெட்டிய 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர்.
சந்தன மரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் உள்ள சந்தன மரங்கள் அடிக்கடி மர்ம நபர்களால் வெட்டி, கடத்தப்பட்டு வந்தது. சந்தன மரங்களை வெட்டி கடத்தும் அந்த கும்பலை பிடிக்க மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் பென்னாகரம் வனச்சரகர் முருகன் தலைமையில் வனவர் புகழேந்திரன் மற்றும் வனக்காப்பாளர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பென்னாகரம் அருகே சாலைக்குள்ளாத்திரம்பட்டி பகுதியில் சிலர் சந்தன மரங்களை வெட்டி, கட்டைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள் சாலைக்குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 45), பாப்பாரப்பட்டி அருகே உள்ள மன்னேரி பகுதியை சேர்ந்த முருகன் (55), கிழக்கு கள்ளிபுரம் பகுதியை சேர்ந்த திம்மன் (47), மாணிக்கம் (67) என்பதும், அவர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து, 11 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேருக்கும் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சந்தன மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு தெரிவித்தார்.