தர்மபுரியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்-200 பேர் கைது


தர்மபுரியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்-200 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:47 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்குமரன், மாதேஸ்வரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட பொது செயலாளர் மணி, பொருளாளர் முருகன், துணைத் தலைவர் சுதர்சனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

முன்னதாக தர்மபுரி தொலைபேசி நிலையத்தின் முன்பு இருந்து தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள், அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

எளிமைப்படுத்த வேண்டும்

தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 4 சட்ட தொகுப்புகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி, நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை விரைவாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

200 பேர் கைது

உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்களின் குறைகளை தீர்க்க குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பணி பதிவேடு பதிவு செய்ய வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறை தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 73 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர்.


Next Story