வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற தாசில்தாருக்கு மிரட்டல் விடுத்த 10 பேர் கைது
அரூர்:
அரூர் தாலுகா வேடகட்டுமடுவு பகுதியில் வழிப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அரூர் தாசில்தார் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் பொன்மணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த சங்கர் (வயது 50), ஹரிஹரன் (25) உள்ளிட்ட சிலர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என கூறி அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக சம்பந்தப்பட்டவர்கள் மீது தாசில்தார் கனிமொழி கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சங்கர், ஹரிஹரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.