கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 14 பேர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணிக்கவும், புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை போலீசார் காட்டேரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற காட்டேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். கல்லாவி போலீசார் ஆனந்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணமூர்த்தி (45) என்பவரை கைது செய்தனர்.
14 பேர் கைது
போச்சம்பள்ளி போலீசார் கல்லாவி சாலையில் ரோந்து சென்றபோது, அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முருகேசன் (58) என்பவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ராயக்கோட்டை மேம்பாலம் மற்றும் பெத்தனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கடைகளில் குட்கா விற்ற முகமது சபீர் (38), வெங்கடசாமி (52) ஆகியோர் போலீசார் கைது செய்தனர். இதே போல காவேரிப்பட்டணத்தில் குட்கா விற்ற ரத்தினராம் (30) என்பவரை, சூளகிரியில் உத்தனப்பள்ளி சாலையில் குட்கா விற்ற ரவி (37), காமராஜ் நகர் பயாஸ் (56), ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. சாலை பகுதியில் குட்கா விற்ற அபு (20), இக்பால் (19), மத்திகிரி சிவபிரகாஷ் (48), அஞ்செட்டி சமியுல்லா (48), ராயக்கோட்டை நவீன்குமார் (29), கெலமங்கலம் சூர்யா (24) ஆகிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.