அரூர் கோட்டத்தில் கடந்த மாதம் மதுபானம் விற்ற 52 பெண்கள் உள்பட 110 பேர் கைது
அரூர்:
அரூர் கோட்டத்தில் கடந்த மாதம் மதுபானம் விற்ற 52 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபானம் விற்பனை
தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம், கஞ்சா, கள் விற்பனை மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி தலைமையிலான போலீசார் அரூர் கோட்டத்திற்குட்பட்ட அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
2,100 மதுபாட்டில்கள்
அப்போது மதுபாட்டில்கள், சாராயம், கஞ்சா, கள் விற்பனை செய்தவர்கள் மற்றும் ஓட்டல், பெட்டிக்கடைகளில் மது குடிக்க அனுமதித்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 52 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 100 மதுபாட்டில்கள், 70 லிட்டர் சாராயம், 100 லிட்டர் சாராய ஊறல், 89 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 250 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.