பட்டறை உரிமையாளரை கொல்ல முயன்ற வழக்கில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது


பட்டறை உரிமையாளரை கொல்ல முயன்ற வழக்கில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது
x

பட்டறை உரிமையாளரை கொல்ல முயன்ற வழக்கில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர், பள்ளப்பட்டியில் கிரில் பட்டறை வைத்துள்ளார். கடந்த வாரம் பட்டறைக்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 3 பேர் சிவக்குமார் மற்றும் அவருடன் வேலை செய்த 2 ஊழியர்களை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதனால் படுகாயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் செவ்வாய்பேட்டையை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர் பாபு (32), அவருடைய மனைவி நந்தினி (30), இவர்களுடைய உறவினர் விமல்ராஜ் (28), கிஷோர் (23) மற்றும் 16 வயதான சிறுவன் ஆகிய 5 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

சிவக்குமாரின் தந்தை கந்தசாமி 15 ஆண்டுகளுக்கு முன்பு கடன் பிரச்சினையில் சிரமப்பட்டு வந்தார். இதனால் பாபுவின் மாமனார் ஏழுமலை என்பவர் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை கந்தசாமியிடம் கொடுத்து பிரச்சினையை முடித்து வைத்தார். அப்போது, கந்தசாமி தனது வீட்டை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று ஏழுமலையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு கந்தசாமி இறந்துவிட்டார். இதையடுத்து அவர் கூறியபடி தனக்கு வீட்டை எழுதி தர வேண்டும் என்று பாபு தரப்பில் சிவக்குமாரிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு சிவக்குமார் சம்மதிக்கவில்லை. இதனால் கூலிப்படையை வைத்து சிவக்குமாரை பாபு மற்றும் அவருடைய மனைவி நந்தினி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாபு, அவருடைய மனைவி நந்தினி, உறவினர் விமல்ராஜ், கிஷோர், 16 வயது சிறுவன் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த 3 பேரை சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story