அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டிய தம்பதி கைது
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியரை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 46). இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தணிகையேஸ்வரி (42). இவர் மணலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு தீபன், ரித்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற அருண்பிரசாத் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். மதியம் அவர் வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அருண்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
10 பக்க கடிதம் சிக்கியது
இதனிடையே அருண்பிரசாத் வீட்டில் சோதனை செய்தபோது, அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய 10 பக்க பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது. அதில் ஆசிரியர் அருண்பிரசாத் மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதப்பட்டு இருந்தது.
அதன் விவரம் வருமாறு:-
நான் கடந்த 2014-ம் ஆண்டு நாமக்காரர் என்கிற சிவசங்கரிடம் ரூ.8 லட்சம் மதிப்பில் 4 சென்ட் நிலம் வாங்கினேன். அதில் வீடு கட்டி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தேன். நாய், கோழி, புறாக்களையும் வளர்த்து வந்தேன். இதனிடையே சிவசங்கர் எனது வீட்டுக்கு செல்லும் 21 அடி பாதையை ஆக்கிரமித்தார். அதில் 16 அடிக்கு தென்னை மற்றும் தேக்கு மரங்களை வைத்து இடையூறு ஏற்படுத்தினார்.
மனவேதனை
மேலும் இதுவரை வாங்கிய நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றினார். இதுகுறித்து கேட்டபோது வழிப்பாதையை கேட் போட்டு மூடி விட்டார். மேலும் சிவசங்கர், அவருடைய மனைவி ஜெயா ஆகியோர் என்னை மிரட்டுவதுடன், குடும்பத்தினரை தவறாக பேசுகிறார்கள். இதனால் மனவேதனையில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த ஆண்டு என் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவராவது ஆங்கில தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதுவே என் கடைசி ஆசை.
இவ்வாறு அதில் ஆசிரியர் அருண்பிரசாத் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தம்பதி கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அருண்பிரசாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக சிவசங்கரன் (50), இவருடைய மனைவி ஜெயா (45) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.