சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இவர்கள் தங்களின் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் சமீப காலமாக ஆஸ்பத்திரியில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்தநிலையில், அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு திருடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குத்துக்காடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும், அவருடன் வந்த கூட்டாளி தப்பிஓடிவிட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருட முயன்ற நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில், தப்பிஓடிய அவனது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
இவர்கள் இதற்கு முன்பு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.