சேலத்தில் கணவன்-மனைவி தற்கொலை: கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது


சேலத்தில் கணவன்-மனைவி தற்கொலை: கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது
x

சேலத்தில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து தம்பதியை கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). இவருடைய மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். லேத் பட்டறை வைத்து நடத்தி வந்த தங்கராஜ், தொழில் தேவைக்காக ரெட்டியூரை சேர்ந்த ராஜா என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் வட்டியும், அசலையும் திருப்பி கொடுக்க முடியாமல் தங்கராஜ் சிரமப்பட்டு வந்தார். இதனால் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா அடிக்கடி அவரை சந்தித்து மிரட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் கடந்த 8-ந் தேதி பூனைக்காடு பகுதியில் விஷம் குடித்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 9-ந் தேதி இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் திடீரென உயிரிழந்தார். இதைக்கண்டு அவருடைய மனைவி விஜயா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் துக்கம் தாங்காமல் அதே தனியார் மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கந்துவட்டி கொடுமையால் தங்கராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மணக்காடு பகுதியில் அவருக்கு சொந்தமாக வீடு இருந்தாலும், இரும்பாலை ஓம்சக்தி நகரில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி குடியேறினார். இதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளார்.

அந்தவகையில் ரெட்டியூரை சேர்ந்த பைனான்சியர் ராஜாவிடம் தங்கராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். மேலும் 5 ரோட்டில் பூ வியாபாரம் செய்து வரும் சித்ரா (45) என்பவரிடமும் தங்கராஜ் ரூ.4 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

இதனால் அவர்கள் இருவரும் தங்கராஜின் லேத் பட்டறைக்கு சென்று நெருக்கடி செய்ததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ராஜா, சித்ரா ஆகியோர் மீது சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தங்கராஜின் குடும்பத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராஜா மற்றும் பூ வியாபாரி சித்ரா ஆகிய 2 பேர் மீதும் கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story