சிறை தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர் கைது
சிறை தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை பாலமேடு பகுதி சேர்ந்த காளியப்பன் மகன் பழனியப்பன் (வயது 36). இவர், கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52) என்பவரிடம் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது அவர், போலியாக மருத்துவம் பார்த்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முருகேசனுக்கு, ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை சேலம் குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் முருகேசன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் முருகேசனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.