பொதுமக்களிடம் ரூ.37 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் போலீசில் சிக்கினார்-ரூ.16 லட்சம், சொகுசு கார் பறிமுதல்


பொதுமக்களிடம் ரூ.37 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் போலீசில் சிக்கினார்-ரூ.16 லட்சம், சொகுசு கார் பறிமுதல்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ.37 கோடி மோசடி செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.16 லட்சம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கவர்ச்சிகர அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏ.கே. டிரேடர்ஸ் என்கிற நிறுவனம் மூலமாக 'யுனிசெல் காயின்' என்கிற திட்டத்தை தொடங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.7,700 முதல் ரூ.15 லட்சம் வரை செலுத்தினால், அந்த பணத்தை கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கவர்ச்சிகரமான ஆசை வார்த்தைகளை கூறினார்.

இந்த நிறுவனத்திற்கு முகவர்களாக நந்தகுமார், சீனிவாசன், சங்கர், பிரகாஷ், வேலன் ஆகியோரை நியமித்தார். அவர்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து முதலீட்டு தொகையை பெற்றனர்.

சுற்றுலா-ஐபோன்

மேலும் உள்நாடு, வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்வதாகவும், ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகள் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் விருந்தும் வைக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் மற்றும் வடமாநிலங்களிலும் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து முதலீட்டை பெற்றனர். ஓராண்டுக்கு அவர்களுக்கு லாபத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பணம் வழங்கப்படவில்லை.

ரூ.37 கோடி மோசடி

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் முகவர்களிடம் கேட்டனர். அப்போது ஏ.கே. டிரேடர்ஸ் உரிமையாளர் அருண்குமார் முதலீட்டு தொகையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் என முகவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில் அருண்குமார் மற்றும் முகவர்கள் 438 பேரிடம் ரூ.37 கோடி மோசடி செய்ததாக தெரிவித்திருந்தனர்.

அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏ.கே. டிரேடர்ஸ் உரிமையாளர் அருண்குமார் மற்றும் முகவர்கள் நந்தகுமார், சங்கர், சீனிவாசன், பிரகாஷ், வேலன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சீனிவாசன், பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் சரண் அடைந்தார். அருண்குமார் தலைமறைவானார்.

ரூ.16 லட்சம் பறிமுதல்

இந்தநிலையில் அருண்குமார் நேற்று கிருஷ்ணகிரி அருகே வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வந்தார். அவரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர். இதனை அறிந்த அருண்குமார் அங்கிருந்து தனது சொகுசு காரில் தப்பினார். ஆனால் போலீசார் அவரை துரத்தி சென்று, மடக்கி பிடித்தனர்.

மேலும் ரூ.16 லட்சம் மற்றும் 12 பவுன் நகை, சொகுசு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அருண்குமாரை கைது செய்து, கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். இதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களிடம் முறையான விசாரணை நடத்தி, பணம் மீட்டு தரப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அருண்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story