ஓசூரில் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
ஓசூர்:
ஓசூர் சத்யநாராயணா லே-அவுட்டை சேர்ந்தவர் வனிதா. இவர் தனது வீட்டின் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், வனிதாவை கீழே தள்ளி, கழுத்தில் கிடந்த 2½ பவுன் தாலியை பறித்து, தப்பி சென்றனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூர்-நல்லூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது, கர்நாடக மாநிலம் சந்தாபுரா அருகே உள்ள பன்னஅள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 31), தும்கூரு அருகே உள்ள பன்னஅள்ளியை சேர்ந்த சிவகுமார் (31) என்பதும், வனிதாவின் தாலியை பறித்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 2½ பவுன் தாலியை பறிமுதல் செய்தனர்.