ஈரோட்டில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண்- மேலும் ஒருவர் கைது
ஈரோட்டில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதிநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த 30-ந் தேதி சூரம்பட்டி வலசில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டு இருந்தது. கோபாலகிருஷ்ணனுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் கோபாலகிருஷ்ணனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் தாக்கியதில் கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சூரம்பட்டிவலசு நேருவீதியை சேர்ந்த ராஜாவின் மகன் கிருஷ்ணகுமார் (26), சூரம்பட்டி பாரிவள்ளல் வீதியை சேர்ந்த பாலுவின் மகன் ஸ்ரீதர் (25), சூரம்பட்டி ஸ்டாலின் வீதியை சேர்ந்த மணியின் மகன் ஜீவா (22) ஆகியோர் கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்தது.
கோர்ட்டில் சரண்
கொலை வழக்கில் கிருஷ்ணகுமாரை கடந்த 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஸ்ரீதர், ஜீவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஜீவா ஈரோடு 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை போலீசார் நேற்று கைது செய்தனர்.