ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது; பஸ்சில் மது கடத்தி வந்தவரும் பிடிபட்டார்
ஈரோடு மாவட்டத்தில் முறைகேடாக மது விற்ற 5 பேர் மற்றும் கர்நாடகாவில் இருந்து பஸ்சில் மது கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் முறைகேடாக மது விற்ற 5 பேர் மற்றும் கர்நாடகாவில் இருந்து பஸ்சில் மது கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
5 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் முன்பாக அல்லது மூடிய பின்னர் பலரும் மதுவிற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் இதுபோன்ற முறைகேடான மது விற்பனையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது ஈரோடு வீரபத்திரா வீதியில் முறைகேடாக மது விற்பனை செய்ததாக கருங்கல்பாளையத்தை சேர்ந்த யுவரன் (வயது 30) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் மது விற்றதாக தாளவாடி சோதனை சாவடி அருகே தொட்டகாஜனூரை சேர்ந்த குமார் (48), சிவகிரி முத்துக்கவுண்டன்பாளையம் நொய்யல் பாலத்தில் அஞ்சூரை சேர்ந்த சண்முகம் (41), அம்மாபேட்டையில் சிங்கம்பேட்டையை சேர்ந்த மாரியப்பன் (44), பூனாச்சியில் மூர்த்தி (45) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஸ்சில் கடத்தல்
இதற்கிடையே காரப்பாளையம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா மாநில அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் பயணம் செய்து வந்த கோவை மாவட்டம் அவினாசி ரோடு கே.கே.லைன் பகுதியை சேர்ந்த பால்பாண்டி (31) என்பவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது கர்நாடகா மாநில மதுபாட்டில்களை அவர் கடத்தி வந்ததை கண்டுபிடித்த போலீசார், பால்பாண்டியை கைது செய்து அவர் வைத்திருந்த 12 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.