மோகனூர் அருகே ஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள ஊனங்கல்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டின் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திடீரென சத்தம் போட்டன. இதனால் ரவிக்குமார் சென்று பார்த்தபோது, 3 பேர் ஆடுகளை பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரவிக்குமார் பிடித்தார். பின்னர் இதுகுறித்து மோகனூர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மோகனூர் சின்ன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி பாண்டியன் (30), கூலித் தொழிலாளி மணிமுத்து (25), தோட்டக்கார தெருவை சேர்ந்த பிரகாஷ் (18) என்பதும், ஆடுகளை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.