மது, சாராயம் விற்ற 123 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் மது, சாராயம் விற்ற 123 பேரை கைது செய்தனர்.
அதிரடி சோதனை
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததால் 10 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, சாராயம் மற்றும் கள் விற்பனை செய்பவர்களை கைது செய்ய போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின்பேரில் போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அழகாபுரம், கருப்பூர், பள்ளப்பட்டி, புதிய பஸ் நிலையம், இரும்பாலை, வீராணம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில் மது மற்றும் கள் விற்றதாக 54 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 528 மதுபாட்டில்கள் மற்றும் 25 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சாராயம்
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் கொளத்தூர், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மது மற்றும் சாராயம் விற்றதாக 69 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 704 மதுபாட்டில்கள் மற்றும் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை நேற்று தொடர்ந்து நடைபெற்று வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.