மது குடிக்க பணம் கேட்டு தகராறு: பார் உரிமையாளரை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது- பெருந்துறை அருகே பரபரப்பு
பெருந்துறை அருகே மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து பார் உரிமையாளரை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து பார் உரிமையாளரை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாருக்குள் புகுந்து தகராறு
திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளி தேவனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 31). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையையொட்டி உள்ள மது பாரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கோடீஸ்வரன், அவரது பெற்றோர் முருகேசன், சரஸ்வதி ஆகியோர் பாரை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 பேர் பாருக்குள் புகுந்து கோடீஸ்வரனிடம், மதுகுடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அருகே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து, நீ எங்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் இப்பகுதியில் பார் நடத்த முடியாது என்று மிரட்டல் விடுத்தனர்.
வாலிபர் கைது
மேலும் உடைந்த பீர் பாட்டிலால் கோடீஸ்வரனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அவரது பெற்றோர் சத்தம் போட்டனர். உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் கோடீஸ்வரனை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் நடத்திய விசாரணையில் டாஸ்மாக் பாருக்குள் புகுந்து கோடீஸ்வரனை பாட்டிலால் குத்தியவர்கள் விஜயமங்கலம் சாணார்பாளையத்தைச் சேர்ந்த விஜி (24), அவரது நண்பர் மேக்கூரைச் சேர்ந்த ஹரி என்கிற ஹரிஹரன் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஹரியை போலீசார் கைது செய்தனர். விஜி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.