சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் கார் கண்ணாடியை உடைத்து திருடிய வாலிபர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் கார் கண்ணாடியை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர், பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
அன்னதானப்பட்டி:
கார் கண்ணாடி உடைத்து கொள்ளை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கே.எஸ்.பாளையத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன் (வயது 30). இவர் கடந்த 1- ந் தேதி பெருந்துறையில் இருந்து சென்னைக்கு சேலம் வழியாக தனது குடும்பத்துடன் காரில் சென்றார். சீலநாயக்கன்பட்டி பைபாசில் ஒரு ஓட்டலில் காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
அப்போது காரின் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப், ஐபேட், செல்போன்கள், ஹெட்செட், துணிமணிகள், பை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
இதற்கிடையே சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், சிறுகாவூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (27) என்பது தெரிய வந்தது. அவர், நண்பர்களுடன் சேர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து ஒரு பவுன் தங்க சங்கிலி, லேப்டாப், ஐபோன், 2 செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் மீட்டனர். மேலும் கைதான ரகுபதி மீது திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிகிறது. ரகுபதியின் கூட்டாளிகள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
வழிப்பறி வழக்கு
இதற்கிடையே சேலம் அன்னதானப்பட்டி பழனியப்பா காலனியை சேர்ந்த சதீஸ்குமார் (33). ரியல் எஸ்டேட் அதிபரான இவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் ரகுபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், கத்தி மீட்கப்பட்டன.